Tuesday, December 7, 2010

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி ( பகுதி 1 )


வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால இந்த பதிவு போட்டதும் என்னால உடனே பதிவு போடமுடியல.(டேய் அப்போ மத்தவங்க எல்லாம் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு பதிவு போடறாங்களான்னு கேட்ராதிங்க)

சரி விஷயத்துக்கு வருவோம், அதாகப்பட்டது திருநெல்வேலின்னா அல்வா, மதுரைனா மல்லி, மனப்பாறைனா முறுக்கு, திருச்சின்னா மலைக்கோட்டை.(எப்புடி நம்ம இன்ட்ரோ) 

இப்போ என்னப்பத்தி, திருச்சியில அண்ணாநகர்ன்னு ஒரு பகுதியில்தான் நான் இருந்தேன். திருச்சிலருந்து புதுக்கோட்டை போற வழில ஏர்போர்ட், MIET, அதுக்கப்பறம் வர மாத்தூர் ரௌண்டான'ல ஒரு லெப்ட் கட் (அடடா!! என்ன ஒரு டமில் பற்று) அடிச்சீங்கன்னா அண்ணாநகர் மெயின் ரோடு வரும். (ஒரு ஆர்ச் இருக்கும்) அடுத்தது அயன்புத்தூர்னு ஒரு கிராமம் நெக்ஸ்ட் கும்பக்குடின்ற கிராமம் அதுக்கப்றம் ஒரு லெப்ட் கட் பண்ணுனாதான் நான் சொல்ற அண்ணா நகர் இருக்கு. கட் பண்ணாம போனா OFT அதாவது துப்பாக்கித் தொழிற்சாலைங்கர ஏரியாவுக்கு போகலாம். திருச்சி மத்தியப்பேருந்து நிலையத்துலருந்து (எந்த ஊர்லருந்து வந்தாலும் இங்கதான் எறக்கி விடுவாங்க, சென்னை கோயம்பேடு மாதிரி) அதாவது ஜங்ஷன்லருந்து 15 கி.மி தூரத்துலதான் இந்த இடம் இருக்கு. அதிகமா மத்திய தர மக்கள் அதிகமா வசிக்கற இடம் இது. நல்ல இடம் ஆனா நான் சொல்லப்போறது நான் அதிகமா திருச்சில சுத்துன இடங்கள், எனக்கு பிடித்த இடங்கள் அங்க கெடச்ச சில அனுபவங்கள் எல்லாம் சொல்லப்போறேன். (தைரியம் இருக்கறவங்க தொடரலாம்) ரெடி ஸ்டார்ட் :)

திருச்சியில கோவில்கள்னு சொல்லப்போனா மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், வயலூர் இந்த கோவில்கள் எல்லாம் பிரபலமான கோவில்கள் எனக்கு தெரிஞ்சவரைக்கும். விடுமுறை நாட்கள்ல இல்லைனா நண்பர்களோட சின்னதா ஒரு டூர் போகணும்னா முக்கொம்பு (திருச்சிலருந்து கரூர் போற வழில இருக்கு), கொள்ளிடம், கல்லணைன்னு போகலாம். அப்டியும் பொழுது போகலையா திருச்சிலருந்து தஞ்சாவூர் மெயின் ரோட்ல ஒரு சவாரி போகலாம். (அதிகமா விபத்து நடக்கற பகுதி அது, அதனால சூதனமா போனா சந்தோஷமா திரும்பி வரலாம்). 
குறிப்பிட்டு சொல்றமாதிரி திரையரங்குகள் அதிகமா இருக்குது திருச்சியில நான் அதிகமா போன மாரிஸ் காம்ப்ளெக்ஸ், அதுல அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுக்கடுத்தது காவேரி தியேட்டர் இது பலக்கரைல இருக்குது நான் அதுல பார்த்த மொத படம் துள்ளுவதோ இளமை.(தலைல துண்டு போடாத குறைதான் இந்த படம் டிக்கெட் எடுக்கறப்ப எல்லாரும்)  இன்னும் கலையரங்கம், ஊர்வசி, சோனா மீனான்னு ரொம்ப தியேட்டர் இருக்கு கெயிட்டீனு ஒரு கில்மா திட்டேர் இருக்கு மார்க்கெட் பக்கத்துல, இப்பவும் அந்தமாதி படம்தான் வருதான்னு தெரியல. இதெல்லாம் திருச்சி மக்களுக்கு அதிகமா பரிட்சயமான இடங்களா இருக்கும் கண்டிப்பா. 

மொதல்ல மலைக்கோட்டையிலருந்து ஆரம்பிக்கலாம். மாரிஸ் தியேட்டர் பக்கத்துல இருக்கற ஒரு காலேஜுக்கு (டுடோரியல் காலேஜ் ஹி ஹி) போறப்ப (சொல்லவே இல்ல) கட் அடிக்கற நேரமெல்லாம் (நான் இல்லைங்க வாத்தியார்) நண்பர்களோட சாய்ஸ் மலைக்கோட்டை உச்சி புள்ளையார் கோயில்தான். பக்தியெல்லாம் இல்ல பொழுது போறதுக்காக போவோம். அங்கருந்து திருச்சியோட முழு அழக ரசிக்கலாம். காவிரி ஆறு அதுக்கு மேல இருக்கற பாலங்கள், மேல இருந்தது பாக்கறப்ப அட்ட பூச்சி சைஸ்ல  போகுற மாதிரி டிரைன், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் கோபுரம், பச்ச பசேல்னு இருக்கற தென்னந்தோப்புகள், வயல்கள்னு பாத்துகிட்டே இருக்கலாம், மலை மேல உள்ள கடைகள்ள கொறிக்கறதுக்கு கொஞ்சம் தீனி வாங்கிட்டு போய் உக்காந்தா பொழுது போறதே தெரியாது அப்டி இருக்கும் அந்த இடம். காதலர்கள் போனா உக்கார விடமாட்டாங்க தொரத்தி விட்டுடுவாங்க அப்போ நாங்க போறப்பல்லாம், இப்ப எப்டின்னு தெரியல. திருச்சியோட அடையாளம் இந்த மலைக்கோட்டைன்னு சொல்லலாம். மலைய சுற்றி கோட்டைகள் இருக்கறதால மலைக்கோட்டைனு பேர் வந்துச்சுனு நான் சொல்லல வரலாறு சொல்லுது :). உச்சி பிள்ளையார் கோவில் போறப்ப தாயுமானவர் சந்நிதி இருக்கு ரொம்ப சக்தி வாய்ந்த இடம்னு சொல்லுவாங்க. 

தி. நகர்லருந்த்து (தில்லை நகர்) மாரிஸ் தியேட்டர் பாலம் வழியா நேரா வந்தா மலைக்கொட்டையோட வாசல் ராஜா காலத்து குகை வாசல் மாதி உங்களை வரவேற்கும். சாமி படத்துலகூட விக்ரம் பிளாஷ்பேக் சொல்றப்போ ஒருத்தர ஓட ஓட தொரத்துவாறு அது மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதிதான். அதுக்கு பக்கத்துல மெயின் ரோட்ல ஒரு பெரிய சர்ச் இருக்கும் அங்க போனது இல்லைனாலும் வெளிய இருந்து பாக்கறப்ப ரொம்ப கம்பீரமா அழகா இருக்கும்.

(அனுபவம் தொடரும்...)

நகர்வலம் - திருச்சிராப்பள்ளி ( பகுதி 2 )

0 comments:

Post a Comment

 
Copyright © ken. All rights reserved.
Blogger template created by Templates Block | Start My Salary
Designed by Santhosh